Search Term:

Thursday, 31 May 2012

சூரியவர்மன் கண்ட ‘அங்கோர் வாட்’

‘அங்கோர் வாட்’ சூரியவர்மன் அரசனால் கி.பி 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இதன் கட்டுமான பணிகள் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் நடை பெற்றிருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. 






'அங்கோர்' என்பதற்கு தலைநகரம் அல்லது புனித நகரம் என்று பொருள்படும். கி.பி 9 ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி.12 ஆம் நூற்றாண்டு வரை முக்கியமானதொரு நகராக இது விளங்கியிருக்கின்றது. உலகளாவிய ரீதியில் புகழ்பெறும் அங்கோர் வாட் ஆலயம் குறித்த வரலாற்றுத் தகவலைப் பார்ப்போம். இந்த ஆலயம் கி.பி 12 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இரண்டாம் சூர்யவர்மனால் நிர்மாணிக்கப்பட்டது. 






இரண்டாம் சூர்யவர்மன் இந்து மதத்தைப் பின்பற்றிய அரசனாவான். எனவே இந்த ஆலயம் ஒரு இந்து ஆலயமாகவே அதாவது விஷ்ணுக்கடவுளுக்காக அவனால் அமைக்கப்பட்டதாகும். பொதுவாகவே இந்திய நாட்டின் கோயில்களின் கட்டிடக்கலையையும் கிரேக்கக் கட்டிடக்கலையையும் கலந்த ஒரு அமைப்பிலேயே இவ்வாலயம் இருக்கின்றது. அங்கோர் வாட்டின் கட்டிட அமைப்புக்கு சலவைக்கல்லே பயன்பட்டிருக்கின்றது.


அங்கோர் வாட் ஆலயத்தின் பிரமாண்டமும் அதன் உருவாக்கத்தின் ஒவ்வொரு பகுதியிலும் எடுத்துக் கொண்ட சிரத்தையும் பார்ப்போர் கண்களை வியப்பில் ஆழ்த்தும். பிரமிட் வடிவினை ஒத்த மூன்று அடுக்குகளையும், தாமரை வடிவினதான ஐந்து கோபுரங்களையும் தாங்கிய அமைப்பில் இவ்வாலயம் நிர்மாணிக்கப்படிருக்கின்றது. இந்தக் கோபுரங்கள் நிலமட்டத்தில் இருந்து 65 மீட்டர் நீளமானவையாகும்.






ஆலயத்தைச் சுற்றி அகழியும், பெருமதிலுமாக 1300 மீட்டர் X 1300 மீட்டர் அளவில் அரணாக அமைந்திருக்கின்றன. ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஆலயத்தின் முழுப்பகுதியும் அமைந்திருக்கின்றது. ஆலய உட்பரப்பில் நுழைந்ததுமே வலதும் இடதுமாக இருபக்கமும் உடைந்து போன இரு நூலகங்கள் இருக்கின்றன.






அங்கோர் சகாப்பதத்தினைப் பறைசாற்றும் சிற்பக்கலைக்கும் தனித்துவமான உதாரணமாக மதிற்சுவர்களிலும், கோயில் உட்புறப்பரப்புகளிலும் விதவிதமான சிற்பவேலைகள் விளங்குகின்றன. 36 வடிவில் 2000 வகையான அப்சரா என்னும் தேவதைகளின் சிற்பவடிவங்கள் இந்த ஆலயத்தில் மட்டுமே இருக்கின்றன.






அத்தோடு இந்து புராணக்கதைகளின் முழுமையான வரலாற்றை கோயிலின் உட்புறச்சுவர்களில் சிற்பமாகவே வடித்திருக்கின்றார்கள். உதாரணமாக தேவர்களும் அசுரர்களும் வாசுகி என்னும் மலைப்பாம்பை மத்தாக வைத்து பாற்கடலைக் கடையும் வரலாற்றின் ஆரம்பம் முதல் முடிவு வரை நீண்டதூரப்பரப்பில் சிற்பச் செதுக்காகக் காட்டப்ப்பட்டிருக்கின்றது.






இவ்வாறு தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும் போது ஏற்பட்ட களைப்பை மறக்கடிக்கும் விதமாக பாற்கடலில் இருந்து தோன்றி களி நடனம் புரிந்தவர்களே அப்சரா என்னும் தேவதைகள் என்பதையும் இச்சுவரில் பதிந்திருக்கும் சிற்பவேலைகள் காட்டுகின்றன.






அத்தோடு மகாபாரதப் போரில் பாண்டவர்களின் அணி, கெளரவர்களின் அணி என்று அத்தனை பேரையுமே சிற்பங்களாக வடித்து, குருஷோத்திரப்போரின் உச்சமும் காட்டப்படுகின்றது.






சிற்பங்கள் சிலவற்றில் செயற்கையாக சிவப்பு போன்ற வர்ணங்கள் மேற்பூச்சாக அமைந்திருந்தன. இது தாய்லாந்து நாட்டில் இருந்து படையெடுத்த சியாம் அரசின் கைங்கர்யம். தாய்லாந்துக்காரர்களுக்கு சிற்ப அமைப்புக்களை இயற்கையாக விடாமல் அவற்றுக்கு வர்ணம் தீட்டிப் பார்க்கும் ஆசை இருந்திருக்கிறது. அதையே இங்கும் காட்டியிருக்கிறார்கள்.



No comments:

Post a Comment